அறிவோம் தாவரங்களை – எள்
எள் (Sesamum indicum)
இந்தியா,ஆப்பிரிக்கா உன் பிறப்பிடம்!
5000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய அழகுச்செடி!
ரிக்வேதம், சிந்து சமவெளி காலங்களில் தோன்றிய வேதகாலப் பயிர் நீ!
ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா,எத்தியோப்பியா என எங்கும் வளரும் எள் செடி!
உன்னை பூதக் கண்ணாடியால் உற்றுப் பார்த்தால் திலகம் போல் திகழ்வாய்!
எனவே உனைத் திலம் என முன்னோர்அழைத்தனர்!
கார எள், காட்டு எள்,காட்டு மயில் எள்,மயில் எள், மலை எள், பேய் எள், சிறு எள், வெள்ளை எள், சிவப்பு எள் என ஒன்பது வகையாய் உள்ள எள்செடி!
எள், பாம்பு என இரு பொருள்பட பாடிய காளமேகப் புலவரின் கற்பனையில் தென்பட்ட பொற்செடி!
சூடாமணி நிகண்டில் எள்,நு,எண் எனப்பொருள்படும் அருமைச்செடி!
“எரி எள்ளு அன்ன நிறத்தன்” எனப்பதிற்றுப்பத்துக் கடவுள்வாழ்த்தில் சிவ பெருமானை குறிக்கும் சிவப்பு எள் நீ!
இனியவை நாற்பதில் (16)“எள் துணை ஆயினும்” என இடம்பெற்ற நல் செடி நீ!
சனி பகவானுக்கு ஏற்ற நல்லெண்ணெய் செடி!
ஜாவா போன்ற தீவுகளில் இயற்கையாய் வளரும் அழகுச்செடி நீ!
ப்ரட், குக்கீஸ், கேக் ஆகியவற்றின் அலங்காரப் பொருள் நீ!
கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் சித்த மருந்து நீ!
ஆயுர்வேதத்தின் ஆணிவேர் நீ!
இதயத்தை காக்கும் இனிய மருந்து மூலிகை நீ!
கண் நோய், ஆறாத புண், மூல நோய், தோல் நோய், சொறி சிரங்கு, ரத்தசோகை, வயிற்றுப் போக்கு, புற்று நோய், சர்க்கரைநோய், மன அழுத்தம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத மருந்துச் செடி!’
கொழுத்தவனுக்கு கொள்ளு ,இளைத்தவனுக்கு எள்ளு,’‘ஏழைக்கேற்ற எள்ளுருண்டை,’’கூட்டத்தில் எள் போடக் கூட இடமில்லை’ என்ற பொன்மொழிகளுக்கு வித்தாக அமைந்த நாயகனே!
ஏக்கருக்கு 500 கிலோ விளையும் பணப்பயிரே!
குறைந்த செலவில் நிறைந்த வருவாய் ஈட்டும் தானியமே!
பூ இலை, காய், விதை எண்ணெய், பிண்ணாக்கு என எல்லாம் பயன்படும் நல்ல மருந்துச் செடியே!
ஏழைகளின் வேளாண் உயிரே!
நீவிர் வாழையடி வாழையென நீடூழி வாழ்க! வளர்க!உயர்க!
நன்றி : Prof. Dr.S.Thiyagarajan
Neyveli township
📱9443405050.