அய்ஜால்: மியான்மர் நாட்டில் நிலவும் உள்நாட்டு குழப்பநிலை காரணமாக, அங்கிருந்து யாரும் இந்தியாவுக்குள் நுழைந்துவிடாதபடி தடை விதித்துள்ளது மணிப்பூர் மாநில அரசு.

தற்போது, மியான்மரில் ராணுவத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. பலபேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளனர். எனவே, அண்டை நாடான இந்தியாவிற்குள் மியான்மர் தேசத்தவர் ஊடுருவும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மணிப்பூரின் எல்லைப்புற மாவட்டங்களான சந்தேல், டெங்னோபால், கம்ஜாங், உக்ருல் மற்றும் சுராசந்த்பூர் ஆகியவற்றில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட மாவட்டங்களின் துணை கமிஷனர்களுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தல்கள், மாநில அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மியான்மர் தேசத்தவர்களுக்காக அடைக்கலம் மற்றும் உணவு உள்ளிட்டவைகளை வழங்கும் வகையில் எந்த முகாம்களையும் திறக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் குறிப்பாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் நுழைய முயல்வோரை கடுமையின்றி நல்லமுறையில் திருப்பி அனுப்பிவிட வேண்டுமென்றும், ஆதார் சேர்க்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும், அதுதொடர்பான பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், மோசமான காயங்கள் மற்றும் இன்னபிற மருத்துவ உதவிகள் தொடர்பாக, மனிதாபிமான உதவிகளை செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.