நெல்லை: தமிழகம் முழுவதும் தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்று வரும் நிலையில், தபால் வாக்குச்சீட்டை தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் ஆணையம், சம்பந்தப்பபட்ட ஆசிரியரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து, அதற்கான பாரங்கள் கொடுத்து, தபால் வாக்களிப்பவர்களிடம் அனுமதி பெற்றப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 2,44,000 பேர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பத்திருந்தனர்.
தபால் வாக்களிக்க சம்மதம் தெரிவித்தவர்களிடம் முதியோர்களிடம் மார்ச் 26ந்தேதி முதல் வாக்குப்பதிவு பெறும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர் ம் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெற்று வருகின்றனர். தபால் வாக்கு பதிவதற்கான கால அவகாசம் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த பணியில் தேர்தல் அலுவலர்களுடன் ஆசிரியர்களும் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், தபால் வாக்கு பெறும் பணிக்காக சென்றிருந்தபோது, அங்கு வாக்காளர் வாக்களிக்க கொடுக்கப்பட்ட வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து அதை வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, தென்காசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.பழணி நாடார் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு, அந்த ஆசிரியையை உடடினயாக இடைநீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த ஆசிரியை பள்ளி கல்வித்துறையால் இடைநீக்கம் செய்யப்பட்டார், இதுகுறித்த தகவலை, அந்த பள்ளியின் நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியையின் பெயர் சஹாரா அரோக்கியா அனுஷ்டா என்று கூறப்படுகிறது. இவர் சுராண்டையில் உள்ள ஆர்.சி. நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் .
தேர்தல் நடத்தை விதிகளின் பிரிவு 49 (எம்) இன் படி “விதி 38 ன் கீழ் அல்லது இந்த விதிகளின் வேறு ஏதேனும் விதிகளின் கீழ் வாக்குச் சீட்டு வழங்கப்பட்ட ஒவ்வொரு வாக்காளரும் வாக்குச் சாவடிக்குள் வாக்களிக்கும் ரகசியத்தை பராமரிக்க வேண்டும் …” என்ற விதியை மீறியதாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.