புதுடெல்லி
விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 124 நாட்களாக காசிப்பூர் எல்லையில் போராடி வரும் விவசாயிகள், ஹோலி பண்டிகையான இன்று, டிரம்ஸ் அடித்து, நடனம் ஆடி, பாடி ஹோலி கொண்டாடினர்.
இதுகுறித்து விவாசாயி ஒருவர் தெரிவிக்கையில், பழங்காலத்திலிருந்தே மக்கள் ஹோலியை கொண்டாடி வருகின்றனர். எங்கள் விவசாயி சகோதரர்கள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளதால் நாங்கள் இங்கு திருவிழாவைக் கொண்டாடுகிறோம் என்று கூறினார்.
“ஹோலி பண்டிகையின் போது எங்கள் குடும்பங்களிலிருந்து விலகி இருப்பது ஒரு நல்ல விஷயம் அல்ல என்றாலும், எங்கள் விவசாயி சகோதரர்கள் இங்கு இருப்பதால் சந்தோஷமாக கொண்டாடுகிறோம். எங்கள் கோரிக்கைகளுக்கு சீக்கிரம் கவனம் செலுத்துமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.
மற்றொரு விவசாயி பேசுகையில், போராட்டங்களின் போது இறந்த 300 க்கும் மேற்பட்ட விவசாயிகளை நினைவுகூரும் வகையில் திருவிழா அனுசரிக்கப்படுவதாகவும் கூறினார்.
ஹோலி பண்டிகையை எங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் அது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தின் மனநிலையை குறைக்காது என்றும் அவர் கூறினார். புதிதாக இயற்றப்பட்ட மூன்று சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில், விவசாயிகள், விவசாய சட்ட நகல்களை தீயிட்டு கொடுளுத்தினர். நாட்டுக்கு தேவை இல்லாத இந்திய விவசாய சட்டம் என்பதாலேயே வேளாண் சட்ட நகல்களை விவாசாயிகள் தீயிட்டு எரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.