சேலம்: தமிழகம் மீது கலாச்சார தாக்குதலை பாஜக நடத்தி வருகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்  பங்கேற்றனர்.

பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகம் மீது கலாச்சார தாக்குதலை பாஜக நடத்தி வருகிறது. ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல, தமிழக உரிமையை மீட்பதற்கான தேர்தல் இது. பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டும்.

பத்தாண்டுகளாக தமிழகம் பாதாளத்திற்கு சென்றுள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. பாஜக அரசுக்கு, மோடி, அமித்ஷாவுக்கு அடிபணிந்து இருக்கக்கூடிய ஆட்சியாக பழனிசாமி ஆட்சி நடக்கிறது. நீட் தேர்வு நுழைக்கப்பட்டுள்ளது.

தமிழுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் ஹிந்தி நுழைக்கப்பட்டு உள்ளது. மாநில உரிமைகள் பறிபோயுள்ளன. தமிழகத்தில் நடக்கும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கு மட்டும் அல்ல. பழனிசாமி, பன்னீர்செல்வம் நோக்கம் எல்லாம் மக்கள் பற்றி கவலை இல்லை. அவர்களின் ஆட்சியில் கமிஷன், ஊழல் தான் நடக்கிறது.

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை. அதிமுகவை மிரட்டி, அச்சுறுத்தி அவர்கள் மூலம் பயணிக்க முயற்சி செய்கிறார்கள். பழனிசாமி முதல்வர் ஆன பிறகு அவரது பினாமி, தலைமை செயலர், டிஜிபி வீட்டில் ரெய்டு நடக்கிறது. மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் கூடுதல் நிதி கிடைப்பதாக முதல்வர் பொய் கூறி வருகிறார்.

இந்தியாவை மீட்கும் பொறுப்பு ராகுலிடம் உள்ளது. மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்ததால் தான், தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியவில்லை. கருத்து கணிப்புகள், அனைத்தும் சட்டசபை தேர்தலில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் என தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அமைந்த கூட்டணி போல், இந்தியாவில் எங்கும் அமையவில்லை. 37 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பெற்று பாஜக மத்தியில் ஆட்சி நடத்துகிறது. 63 சதவீத மக்கள் எதிர்க்கட்சிகளுக்கு பிரித்து போட்டு உள்ளனர். எனவே இந்திய அளவில், ஒரு கூட்டணி அமைய ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று பேசினார்.