சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகளை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று அச்சுறுத்தலால் தமிழகத்தில் கல்வி நிலையங்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் கட்டுப்பாட்டுகளுடன் திறக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படுகிறது.
அதன்படி ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் கூறி இருப்பதாவது: தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமே நடைபெறும்.
செய்முறை தேர்வுகளை வரும் 31ம் தேதிக்குள் நேரடி முறையில் நடத்தி முடிக்க வேண்டும். ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் உள்ளிட்டவை ஆன் லைனிலேயே நடத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களை நேரடியாக அழைத்து தேர்வு நடத்த முடியாவிட்டால் முன் அனுமதி பெற்று பின்னர் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது.