டெல்லி: அஸ்ஸாம் மாநிலத்தில் முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கும், மேற்குவங்க மாநிலத்தில் முதல்கட்டமாக 30 தொகுதிகளுக்கும் இன்று (மார்ச் 27ந்தேதி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன்  பலத்த பாதுகாப்புடன் வாக்களிக்க வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.

வாக்குப்பதிவுக்கு இந்த முறை கூடுதலாக ஒரு மணி நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி  மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைகிறது. மாலை கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு உடையுடன் வந்து வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.. இதில், 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாகவும், 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய  மூன்று மாநிலங்களிலும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இன்று, மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக  5 மாவட்டங்களில் இருக்கும் 30  தொகுதிகளான பஸ்சிம் மிட்னாபூர் பிரிவு-1, புர்பா மிட்னாபூர் பிரிவு -1, பன்குரா, ஜர்கிராம் மற்றும் புருலியா ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

அஸ்ஸாம் மாநிலத்தில் 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

வாக்குப்பதிவை முன்னிட்டு,  வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தலுக்கான பணியில் தயாராகி வருகின்றனர்.   கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் பாதுகாப்புடன் வாக்களிக்கப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.  இம்மாநிலங்களில் சில பகுதிகளில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால், பாதுகாப்புக்கு துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.