சென்னை: தமிழக மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது: இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 54 தமிழக மீனவர்களை நேற்று ஒரே நாள் இரவில் கைது செய்துள்ளதுடன், 5 விசைப்படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த மனித உரிமை மீறல் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வது, படகுகளை கைப்பற்றுவது, மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவது, கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, சுட்டுக் கொல்வது என தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர். இதுவரை தமிழக மீனவர்கள் 245 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதை தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய் மூடி மௌனியாக இருப்பதன் விளைவே இந்த தொடர் கைது சம்பவங்களுக்கு காரணம் என்பதை சுட்டிக்காட்டுவதுடன், இந்த கைது நடவடிக்கைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தில், இந்தியா வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்திருப்பது மறைமுகமாக இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கை என்பதை மறுக்க இயலாது. இதேசமயத்தில் தான், தமிழக மீனவர்களை கைது செய்வதும், சிறையிலடைப்பதும் தொடர்ந்து கொண்டே உள்ளது.
எனவே, கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து அவர்கள் தமிழகம் திரும்புவதற்கும், அவர்களது விசைப்படகுகள் மற்றும் மீன்பிடிச் சாதனங்களை திரும்ப ஒப்படைப்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மேலும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்கவும், மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதற்கும் மத்திய அரசு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.