திஸ்புர்: அஸ்ஸாமில் காங்கிரஸ் தலைமையிலான மஹாஜோட் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி அரசு அமைக்கும் என சந்திஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அசாமில் 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறது. தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது.
அங்கு 15 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தது. இந்த நிலையில் மீண்டும் ஆட்சியை அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.யு.டி.எஃப்), போடோலாண்ட் மக்கள் முன்னணி, அஞ்சலிக் கானா ஆகியவற்றுடன் காங்கிரஸ் கட்சி ‘மஹாஜோட்’ பெரும் கூட்டணி அமைத்து, தற்போதைய (2021) சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது.
அங்கு முதற்கட்ட வாக்குப்பதிவு 47 தொகுதிகளுக்கு நாளை (மார்ச் 27ந்தேதி) நடைபெற உள்ளது.
சத்திஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளராக அஸ்ஸாம் மாநிலத்துக்கு கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் ஊடகம் ஒன்றுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தபோது, அஸ்ஸாம் மாநிலத்தின் அடுத்த அரசாங்கத்தை காங்கிரஸ் தலைமையிலான மஹாஜோட் கூட்டணி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.
சிஏஏ நிலைப்பாட்டில் பாஜக அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக குற்றம் சாட்டியவர், பாஜக அரசின் வெவ்வேறு நிலைப்பாடுகள், அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தலில், பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான மகாஜோட் கூட்டணி 100க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், எண்களைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை,பெரும்பான்மை இடங்களை வெல்வோம் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் 47 தொகுதிகளில் 43 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மற்ற நான்கு இடங்களில், மஹாஜோட் கூட்டணி கட்சியினர் போட்டியிடுகிறார்கள். அங்கு நடைபெற உள்ள மூன்று கட்ட தேர்தல்களை பொறுத்தவரை, மகாஜோட் கூட்டணி மூன்றில் நான்கில் பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்கும் என்றார்.
மாநிலத்தில், பாஜக ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாநில மக்களை பாஜக ஏமாற்றிவிட்டது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். மக்கள் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியாக இல்லாததால் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அதை தேர்தல் மூலம் தண்டிப்பார்கள்.
அசாம் முழுவதும் பாஜகவுக்கு எதிராக வலுவான CAA எதிர்ப்பு உணர்வு உள்ளது. சிஏஏ சட்டத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஒரு வருடமாக போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது அஸ்ஸாம்தான், CAA செயல்படுத்தப்பட்டால் அவர்களின் அடையாளம் ஆபத்தில் உள்ளது என்பதை மக்கள் அறிவார்கள். நாங்கள் ஆட்சி அமைத்தால், சிஏஏ செயல்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.