டில்லி
வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகெங்கும் உள்ள 75 நாடுகளுக்கு இதுவரை சுமார் 60 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
தற்போது இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. எனவே இந்தியாவில் பற்றாக்குறை ஏற்படலாம் என்பதால் வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்தன.
இந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய அரசின் அறிக்கையில், “இந்திய அரசு கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கவில்லை. தடுப்பூசி உற்பத்தி, நாட்டின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் தடுப்பூசி விநியோகத்தில் ஒரு சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு சில தினங்களில் மீண்டும் ஏற்றுமதி தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.