சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம், தனியார் நிறுவனங்களும், தங்களது நிறுவன தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6ஆம் தேதியன்று பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,  அரசுத்துறை மட்டுமின்றி தனியார் துறையினரும்  ஏப்ரல் 6ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டிருந்தது. 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 135பி அடிப்படையில் தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

ஆனால், பல நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை, ஓட்டுப்போட்டு விட்டு பணிக்கு வரும்படி வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு  தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நிதிமன்றம்,

அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் வாக்குப்பதிவு நாளில் ஊதியம் பெறும் விடுமுறையைப் பெறுவதற்கான உரிமையை விளக்கும் அறிவிப்பை உடனே வெளியிடுமாறு, தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும்,  சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது எடுக்கப்படும்  குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து, நிறுவன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.