டோக்கியோ: ஜப்பானில் இந்தாண்டின் மத்தியில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு, வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்ற முடிவு, அந்நாட்டின் சுற்றுலா தொழிலை கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் கடந்தாண்டே நடைபெற்றிருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா காரணமாக இந்தாண்டு நடைபெறவுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளையடுத்து, ஜப்பானில் சுற்றுலா துறையில் பல புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஹோட்டல் தொழில் உட்பட சுற்றுலா சார்ந்த பல தொழில்களில் இருந்தவர்கள் தங்களின் தொழில்களை விரிவாக்கி, பெரிய எதிர்பார்ப்போடு இருந்தனர்.

ஆனால், தற்போது நிலைமை வேறாகிவிட்டது. ஒலிம்பிக் போட்டிகளைக் காண, எந்தவொரு வெளிநாட்டுப் பார்வையாளரும் அனுமதிக்கப்படமாட்டார் என்ற முடிவினால், அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

அதேசமயம், காலப்போக்கில் நிலைமை சீராகும் என்ற நம்பிக்கையிலும் உள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு, ஜப்பானில் ரக்பி உலகக்கோப்ப‍ை போட்டிகள் நடைபெற்றபோது, சுற்றுலாத் துறை பெரியளவில் வளர்ச்சியடைந்தது.

அந்த நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது எதிர்பாராத ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆனாலும், உணர்ச்சிவசப்படாத ஜப்பானியர்கள், தங்களின் தன்னம்பிக்கையை கைவிடவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.