டில்லி
மத்திய அரசு புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் குறித்துப் பரிந்துரை செய்ய தற்போதைய தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதி உள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள எஸ் ஏ பாப்டேவின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நியமனத்தில் சில மரபுகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் ஒன்றாக தற்போதைய தலைமை நீதிபதி அடுத்து யார் பதவி வகிக்க வேண்டும் எனப் பரிந்துரைப்பது ஒன்றாகும்.
மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமை நீதிபதி பாப்டேவுக்கு அவருடைய பரிந்துரையைக் கேட்டு கடிதம் எழுதி உள்ளார். வழக்கமாக இந்த பதவிக்கு மூத்த நீதிபதியின் பெயர் பரிந்துரைக்கப்படும். பெரும்பாலும் அவர் தகுதியாக இருந்தால் அவரை பிரதமர் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் தலைமை நீதிபதியாக நியமிப்பார்.
அவ்வகையில் தற்போது மூத்த நீதிபதியாக என் வி ரமணா உள்ளார். அவரை பாப்டே பரிந்துரைப்பார் எனக் கூறப்படுகிறது. ரமணா இதற்கு முன்பு டில்லி உயர்நீதிமன்றத்திலும் ஆந்திரா உயர்நீதிமன்றத்திலும் தற்காலிக தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தவர் ஆவார். உச்சநீதிமன்ற மரபுப்படியும் அவரையே அடுத்த தலைமை நீதிபதியாகப் பரிந்துரை செய்ய வேண்டும்.
ரமணா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால் இவரது பதவிக்காலம் 2022 ஆம் வருடம் ஆகஸ்ட் 23 வரை இருக்கும். இவர் மீது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ஏற்கனவே பாரபட்சமாக நடப்பதாகக் குற்றம் சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ரமணாவின் தொல்லை தாங்காமல் தான் ஜெகன் அவ்வாறு குற்றம் சாட்டியதாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்பது அனைத்து நீதிபதிகளுக்கும் தலைவர் என்ற அந்தஸ்து உடைய பதவியாகும். அதே வேளையில் ரமணா மீது பாரபட்சம் பார்ப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது இவரைத் தலைமை நீதிபதியாகப் பரிந்துரை செய்வது சரியா எனச் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த கேள்வியைப் பல மூத்த வழக்கறிஞர்கள் எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.