மார்ச் 22 உலக தண்ணீர் தினம் – தண்ணீர், போருக்கு வழிவகுக்குமா ?
சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்
“நீரின்றி அமையாது உலகு” என்றான் அய்யன் வள்ளுவன். ஆனால், நாம் வாழும் காலத்திலே, நீரற்ற நாடுகளை காண கூடும் என்றால் அது மிகையாகாது. மார்ச் 22-ம் தேதியாகிய இன்று உலக தண்ணீர் தினம் . “தண்ணீர் பட்ட பாடு” என்பது பழையமொழி. அனேகமாக, இந்த பழமொழி நடைமுறைக்கு பொருந்தாத 1993-ம் ஆண்டு தொட்டு இந்த உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது ( நிச்சயமாக கொண்டாடப்படவில்லை ).
தொன்னூறுகளின் தொடக்ககால பிரயாணங்களின் போது, இப்பொது போன்று தண்ணீர் குப்பிகளை கையிலெடுத்து செல்வதில்லை. மாறாக, அனைத்து பேருந்துகளிலும் தண்ணீர் வாளி இருக்கும். சற்றும் யோசிக்காமல் அதை வயது, வர்க்க பேதமின்றி அனைவரும் பருகினார்கள். “BISLERI ” தண்ணீர் என்பது பகட்டாக தெரிந்தது.
காலப்போக்கில், சுத்தம், சுகாதாரம், தண்ணீர் பற்றாக்குறை என்ற போர்வையில், நம் கண் எதிரே தண்ணீர் வணிகமயமானது. இதை கண்டு மனம் கொதிக்கும் மக்களா நீங்கள் ? பொறுங்கள் ! இதுவரை நாம் கண்டது முன்காட்சி தான். நாம் இனி காணவிருக்கின்ற பிரம்மாண்ட மாற்றத்தின் தாக்கத்தை இன்று உணராதவர்களாய் இருப்போமென்றால், கடவுளாலும் நம்மை காக்க இயலாது.
790 கோடி மக்கள் தொகை கொண்ட இன்றைய உலகில், புள்ளிவிவரகங்களின் படி 110 கோடி மக்களுக்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான நீர் கிடைக்கவில்லை. ஆனால், 2050 -ம் ஆண்டு உலக மக்கள் தொகை 960 கோடியை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த மக்கள் தொகைக்கு பசியாமல் உணவளிக்கவேண்டுமென்றால் உலக உணவு உற்பத்தியை 60 % உயர்த்தவேண்டும். நமது தண்ணீர் தேவையில் 70 % உணவு உற்பத்திக்கே செல்வவிடுகிறோம். இன்றே, தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் நாம், 2050 -ம் ஆண்டுக்கான உணவு தேவையை எப்படி பூர்த்தி செய்வோம் என்பதற்கான வேலை திட்டம் எவரிடமுமில்லை. 2035 -ம் ஆண்டு வாக்கில் உலக மின் தேவை 70 % அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதில், 50 % தேவைகள் இந்தியாவிலும் சீனத்திலுமே இருக்கும். பெருகும் தண்ணீர் மற்றும் மின் தேவையானது வளரும் நாடுகளான இந்தியா போன்ற தேசங்களின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும்.
20 -ம் நூற்றாண்டு யுத்தங்கள் பெரும்பாலும் எண்ணெய்க்காக, மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியங்களில் நடந்தவைகளாகும். மாறாக, 21 -ம் நூற்றாண்டு யுத்தங்கள் யாவும் சுத்தமான தண்ணீருக்காக மட்டுமானதாக இருக்கும்.
உலகெங்கும் 276 -ம் அதிகமான சர்வதேச எல்லை கடந்த ஆற்றுப்படுகைகள் உண்டு. கடந்த 50 ஆண்டுகளில், இவற்றில் சுமார் 150 க்கும் அதிகமான சர்வதேச நீர் பகிர்வு ஒப்பந்தங்கள் ஆகியுள்ளன. இருந்தாலும், 10க்கும் அதிகமான மிக மிரளவைக்கும் சர்வதேச தண்ணீர் பிரச்சனைகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் மிக அபாயகரமானதாக, இந்திய சீனத்திற்கு உடனான பிரம்மபுத்ரா நதி பங்கீடு, எத்தோப்பியா எகிப்து உடனான நெயில் நதி பங்கீடு மற்றும் துருக்கி -ஈராக் உடனான டைகிரஸ் நதி பங்கீடு பிரச்சனையானது எந்நேரமும் பெரும் போராக உருவெடுக்கும் நிலையில் உள்ளவை.ங
எண்ணெய் பார்த்த ரத்தத்தை விட தண்ணீர் பார்க்க போகும் ரத்தம் அதிகமானது. ஏனெனில், எண்ணெய் வசதிக்கான தேவை, தண்ணீர் வாழ்வியலுக்கான தேவை. நீரின்றி அமையாது உலகு என்றான் வள்ளுவன், அவன் இன்று இருந்தால், நீரால் அழியும் உலகு என்றிருப்பானோ ?