சமீபத்தில், ஆஸ்திரேலியாவில், டெஸ்ட் தொடரை இந்திய இளம் அணி வென்றபிறகு, இந்திய கிரிக்கெட்டின் வைப்புத் திறன் அதிகரிப்பு குறித்தப் பேச்சுகள் முக்கியத்துவம் பெற்று வருகிறது. சமீபத்தில் பேசிய சச்சின் டெண்டுல்கர், இந்தியக் கிரிக்கெட்டின் வைப்புத்திறன் அதிகரிப்புக்கு, ஐபிஎல் தொடர்கள் முக்கிய காரணம் என்று பேசினார்.

இத்தொடரின் மூலம், பல நாடுகளின் கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு, இந்தியர்களுக்கு அதிகளவில் கிடைப்பதால், இந்திய இளம் வீரர்களின் திறன்கள் அதிகரிக்கின்றன மற்றும் குறிப்பிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது, அந்நாட்டின் முக்கிய வீரர்களை ஏற்கனவே சந்தித்த அனுபவம் இருப்பதால், சூழல்களை எளிதாக கையாள முடிகிறது என்பது அவரின் கருத்தாக இருக்கிறது.

இப்போது, டெண்டுல்கரின் கருத்தில் இருக்கும் முரண்பாடுகளைப் பார்ப்போம்.

ஐபிஎல் தொடர் என்பது ஒரு டி-20 தொடர். அந்தவகையில், ஐபிஎல் தொடர்களில் அதிகம் விளையாடும் இந்திய வீரர்களுக்கு, டி-20 போட்டித் திறன்தான் பெரியளவில் கூடியிருக்க வேண்டும். ஆனால், இந்திய அணியைப் பொறுத்தவரை, கடந்த 2007ம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற உலகக்கோப்பை டி-20 சாம்பியன்ஷிப் கோப்பையை மட்டுமே வென்றது.

அதன்பிறகு நடைபெற்ற 5 உலகக்கோப்பை டி-20 தொடர்களிலும், இந்தியாவால் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. ஆனால், ஐபிஎல் தொடர் 2008ம் ஆண்டே தொடங்கிவிட்டது என்று பொருள். அதேசமயம், சமீபகால சர்வதேச டி-20 தொடர்களை இந்திய அணி தொடர்ச்சியாக வென்று வருகிறது என்பது உண்மைதான்! ஆனால், உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடரை வெல்வதுதான் திறமையின் உச்சமாக மதிக்கப்படும்! அணியின் மனவலிமையும் அப்போதுதான் உண்மையாக மதிப்பிடப்படும்.

இந்திய அணி, 2019 உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதியில் குறைந்த ரன்களை சேஸ் செய்ய முடியாமல் தோற்று வெளியேறியது. அதன்பிறகு, உள்நாட்டில் பல தொடர்களை இந்திய அணி வென்றாலும், கடந்தாண்டின் துவக்கத்தில், நியூசிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்தது.

வைப்புத்திறன் என்பது அனைத்துவகை கிரிக்கெட்டிற்குமானது! கிரிக்கெட்டின் உயரிய வடிவமாக இன்றுவரை மதிக்கப்படுவது டெஸ்ட் போட்டிகள்தான்! அதுவும், வெளிநாடுகளில், வலிமை வாய்ந்த அணிகளை டெஸ்ட் தொடர்களில் வெல்வதுதான் ஒரு அணியின் உண்மையான வலிமையை மதிப்பிடுவதற்கான அளவுகோலாகும்.

அந்தவகையில், கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில்தான் இந்திய அணியின் உண்மையான திறன் மற்றும் மனவலிமை மதிப்பிடப்பட்டது. இரண்டாம் நிலை வீரர்களைக் கொண்ட ஒரு சாதாரண இந்திய அணி, கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்ட நிலையிலும், தற்காலிக கேப்டனின் தலைமையில், கொரோனா கெடுபிடிகளை மீறி, வலிமையான ஆஸ்திரேலிய அணியை, அதன் சொந்த மண்ணில் சாய்த்து, டெஸ்ட் தொடரை வென்றது.

பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் கூட, இந்த வெற்றி குறித்து குறிப்பிடுகையில், “ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்ட துணைக் கண்ட அணிகளிலேயே, இந்தளவிற்கு தைரியமான அணியை நான் கண்டதில்லை” என்று இந்திய அணியைப் புகழ்ந்தார்.

அப்போது, இந்திய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட சில நிர்வாகிகள் மேற்கொண்ட பல முயற்சிகள்தான், இந்திய அணியின் மனவலிமை அதிகரிக்க காரணமாக அமைந்ததாக கூறப்பட்டது. அதன்பிறகு, இங்கிலாந்து அணிக்கெதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும், மனவலிமையை வெளிப்படுத்திய இந்திய அணி, சிறப்பாக வெற்றியை ஈட்டியது.

எனவே, இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மேற்கொள்ளும் உளவியல் பயிற்சிகள்தான், இந்திய அணியை சமீப நாட்களாக வலுப்படுத்தியுள்ளதே தவிர, ஐபிஎல் தொடர்கள் அல்ல என்ற முடிவிற்கே வர முடிகிறது. வேண்டுமானால், ஐபிஎல் தொடர்களுக்கு அதில் ஒரு சிறிய பங்கு இருக்கலாமே தவிர, டெண்டுல்கர் சொல்வதைப் போன்று பிரதானமாக பங்கெல்லாம் இருக்க முடியாது!