சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணியையும் மாநிலஅரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று தடுப்பூசி போடும் மாபெரும் முகாம் தொடங்கி உள்ளது. இன்று ஒரே நாளில் சுமார் 2ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த தடுப்பூசி போடும் முகாமில், 20 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த முகாம், காலை 9 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 5 மணிவரை நடைபெறும்.
இந்த முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோய் உள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.
முகாமுக்கு வருபவர்கள் ஆதார் அட்டை உள்பட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும் என்றும், பொதுமக்கள், முன்களப்பணியாளர்கள் உள்பட அனைவரும் முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.