பேரின்ப கனாக்காலம்கவிஞர் ராஜ்குமார் மாதவன்

ஓலை குடிசை
ஓட்டை ஓராயிரம்
மின்சாரமில்லை
மின்விளக்கும் அங்கில்லை
பகலில் ஒளிக்கு பஞ்சமில்லை
மழையில் வீட்டுக்குள் பூவானம்
கூரையில் வானம் கண்டோம்
படுத்துக்கொண்டே பால்வீதிக்காண்போம்- இருந்தும்
அது ஒரு பேரின்ப கனாக்காலம்

மண் சுவரு நாலு
தட்டி கதவு ஒன்னு
குந்தியிருந்தால் ஆறு பேர்
நீட்டிப்படுத்தல் நாலு பேர் -இருந்தென்ன,
நாய்க்கும் இடம் கொடுத்தோம்
கோழியோடு இறை உண்டோம்
அவ்வப்போது அக்கோழியையும்
சேர்த்து உண்டோம்- இருந்தும்
அது ஒரு பேரின்ப கனாக்காலம்

போய்சேர வெறும் கால்
ஓட்டிச்செல்ல மிதிவண்டி- ஆனாலும்
பயணங்கள் தூரமாய் இருந்ததில்லை
அதிகமாய் பயணித்தது
ஞாயிற்றுக்கிழமை ஆரம்பசுகாதாரநிலையம் தான்
எல்லா நோய்க்கும்
வெள்ளை மஞ்சள் மாத்திரைதான்
மருந்துக்கான பயணமே
சுற்றுலா பயணம்தான், உண்ண உணவோடு.
இருந்தும்- அது ஒரு பேரின்ப கனாக்காலம்

இலவச பஸ் பாஸ் பயணங்கள்
பள்ளிக்கு வழிசொன்னது
பொட்டு தங்கமும்
தங்காமல் போனது
பித்தளை பாத்திரங்கள்
தங்கமாய் மாறியது
அத்தனையும் பள்ளி
முடிப்பதற்குள்.

கடன் பட்டு
கல்லூரிக்கு பயணம்
பட்டம் வாங்குவதற்குள்
நில பட்டாக்கள் தொலைந்தன
ஊனி எழுகையில்
தந்தையின் நெடும் பயணம்.

எழுந்து நடக்கையில்
நாடு கடந்தேன்
ஓடி உழைத்தேன்
மச்சுவீடு கண்டேன்
மெச்ச வாழ்ந்தேன்
தாயை பிரிந்தேன்
சுகங்களை இழந்தேன்

ஓலை குடிசை
ஓட்டை ஓராயிரம்
மின்சாரமில்லை
மின்விளக்கும் அங்கில்லை
பகலில் ஒளிக்குபஞ்சமில்லை
மழையில் வீட்டுக்குள் பூவானம்
கூரையில் வானம் கண்டோம்
படுத்துக்கொண்டே பால்வீதிக்காண்போம்- ஆனாலும்
அது ஒரு பேரின்ப கனாக்காலம் !