மதுரை: திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் கிறிஸ்தவ வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழக அரசியல் களம் தகதகவென தகிக்கத் தொடங்கி உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று வேடசந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் காந்திராஜன், நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் ஆகியோரை ஆதரித்து வடமதுரையில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, நத்தம் தொகுதியில் வாக்காளர் களுக்குப் பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். வேண்டாம் என்றுசொல்ல வேண்டாம். அது உங்கள் பணம் என்றவர், இந்த பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவ வன்னியர்கள் என்னை நேரில் சந்தித்து, தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கை விடுத்த்துள்ளனர். அவர்களின் கோரிக்கை குறித்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம, நீட் தேர்வு வருவதற்குக் காரணம் திமுகதான் என்ற குற்றச்சாட்டை கூறி வருகிறார். ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோது தமிழகத்துக்கு நீட் வரவில்லை. இவரது ஆட்சியில் தான் நீட் தேர்வு வந்தது என்று கூறியவர், இந்தத் தேர்தலில் கதாநாயகன், கதாநாயகி இரண்டுமே திமுக தேர்தல் அறிக்கைதான். பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் சின்னம்மாள் அவர்கள் ஒரு எளிமையான வேட்பாளர். அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர், அவரை கோமாளி மந்திரி என்று சொல்வதா, காமெடி மந்திரி என்று சொல்வதா? – ‘தெர்மாகோல் புகழ்’ செல்லூர் ராஜூ, அவர்தான் நிற்கிறார். எனவே ஒரு அமைச்சரை எதிர்த்து நம்முடைய சின்னம்மாள் அவர்களை நிறுத்தி இருக்கிறோம். அந்த அமைச்சருக்கு பாடம் புகட்ட, அவர்கள் அடித்துக் கொண்டிருக்கும் கொள்ளைகளுக்கு முடிவுகட்ட, நம்முடைய மகளிர் அணியைச் சார்ந்த சின்னம்மாள் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.
மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள், ஏற்கனவே மதுரை மத்திய தொகுதியில் வென்று, சட்டமன்றம் சென்று, அளப்பரிய சாதனைகளை தொடர்ந்து செய்துகொண்டு இருப்பவர். எனவே அந்த சாதனைகள் தொடர இந்த தொகுதி மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிகாண அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், மதுரை வடக்கு தொகுதியில் தளபதி அவர்கள், அவரும் ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து அந்த தொகுதி மக்களுடைய முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் – பணியாற்றியவர். இன்றைக்கு மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர்.
அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், மதுரை தெற்கு தொகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக – நம்முடைய அருமை அண்ணன் வைகோ அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு இங்கே நிறுத்தப்பட்டிருக்கும் சகோதரர் பூமிநாதன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் ஆதரவு தந்து மாபெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.