டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தால் முடக்கப்பட்ட டெல்லி காசிப்பூர் நெடுஞ்சாலை மீண்டும் போக்கு வரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டம் இன்று 114வது நாளாக தொடர்கிறது.

மோடி அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் வடமாநில விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டம் இன்று 114வது நாளாக தொடர்கிறது. போராட்டத்தையொட்டி, டெல்லியின் எல்லைகள் முடக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் மத்தியஅரசு அக்கறை காட்டாத நிலையில்,  சட்டங்களையும் திரும்பப்பெறுவது வரை போராட்டத்தை தொடரப்போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்து உள்ளன. வரும் 26ந்தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கிடையில்,  ஜனவரி 26ந்தேதி குடியரசு தினத்தன்று டில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது வன்முறை ஏற்பட்டதால், விவசாயிகள் டெல்லிக்குள் புகாதவாறு, காசிப்பூர் எல்லை  காவல்துறையினரால் தடுப்பு வைக்கப்பட்டு, மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் மேலும்  சிரமத்திற்கு ஆளானார்கள்.

அதைத் தொடர்ந்து டில்லி காவல்துறை மற்றும் காசிப்பூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இடையே நடத்தப்பட்ட ஆலோசனையில் காசிப்பூர் எல்லையை திறக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி டில்லி – காசிப்பூர் எல்லை  மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.

அதேசமயம் டில்லியில் இருந்து உத்தரபிரதேசம் செல்வோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து டில்லி போலீசார் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.