கொல்கத்தா: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில், பாஜகவின் தலையீடு தொடர்ந்தால், தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்துவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
அவர் கூறியுள்ளதாவது, “பாஜகவிற்கு எதிரான எனது போராட்டத்தை யாராலும் தடுத்துவிட முடியாது. மேற்கு வங்கத்தில் அமித்ஷாவின் பேரணி தோல்வியடைந்துள்ளது. அவருடைய பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் யாரும் வருவதில்லை. இதனால் அவர் கோபமடைந்துள்ளார். 6 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அமைச்சர்கள் யாரும் பேச்சுவார்த்தை நடத்தாமல், மேற்குவங்கத்தில் உள்ளனர். இங்கே ஹோட்டல்களை முன்பதிவு செய்து என்னைக் கொல்ல சதி செய்கின்றனர்.
அவர்களுக்கு என்ன வேண்டும்? என்னை கொல்ல வேண்டுமா? அப்படி செய்து தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைத்தால் அது தவறு. தேர்தல் ஆணையத்தை அமித்ஷா வழிநடத்துகிறாரா? தேர்தல் ஆணையம் கூட அமித்ஷாவின் கட்டளைப்படிதான் இயங்குகிறது. அவர்தான் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவுகளை பிறப்பிக்கிறார்.
அந்த ஆணையத்தின் தன்னாட்சிக்கு என்ன ஆனது? எனது பாதுகாப்பு இயக்குநர் விவேக் ஷாவை, அமித்ஷாவின் உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் பாஜக தொடர்ந்து தலையிட்டால், அந்த அமைப்பின் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்துவேன்” என்றுள்ளார் மம்தா பானர்ஜி.