சென்னை

மிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன.   அதன்பிறகு மத்திய அரசு பொது முடக்கம் அறிவித்ததால் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டன.  அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டனர்.

அதன் பிறகு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன.  தேர்வுகள் நெருங்குவதால் முதலில் 12 ஆம் வகுப்புக்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் இயக்கப்பட்டன.  அதன் பிறகு 9,10, மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் இயங்க தொடங்கி நடைபெற்று வருகின்றது.

கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.  எனவே 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்றவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன.  ஆனால் தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 9,10, 11 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.