டில்லி
கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மொத்தம் 71,01,299 பிராவிடண்ட் ஃபண்ட் கணக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.
ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்புக்காக பிராவிடண்ட் ஃபண்ட் நிதி உருவாக்கப்பட்டது. இதில் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து 12% மற்றும் பணி அளிப்போர் தரப்பில் இருந்து 12% ஆகியவை நிதியத்தில் செலுத்தப்படுகிறது. இந்த பணத்துக்கு வட்டி அளிக்கப்படுகிறது.
ஊழியர் பணி ஓய்வு பெறும் போதோ அல்லது பணி நீக்கம் அல்லது ராஜினாமா செய்யும் போதோ இந்த பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
கடந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாக நாடெங்கும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி பலதரப்பட்ட அலுவலகங்கள், தொழிலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்கவில்லை. பலரும் பணி இழக்கும் நிலை ஏற்பட்டது.
இதையொட்டி பிராவிடண்ட் ஃபண்ட் நிதியத்தின் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குத் தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் எழுத்து பூர்வ பதில் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பதிலில், “கொரோனா தாக்குதல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் பல நிறுவனங்கள் இயங்கவில்லை. பலர் பணி இழப்புக்கு ஆளாகினர். இதனால் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 71,01,299 பிராவிடண்ட் ஃபண்ட் கணக்குகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.
சென்ற வருடம் இதே கால கட்டத்தில் 66,66,563 கணக்குகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன., இதில் 2020 மார்ச் 25 முதல் மே 1 வரை மட்டும் 31,01,818 பிராவிடண்ட் ஃபண்ட் கணக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த கால கட்டத்தில் 1,27,72,120 பிராவிடண்ட் ஃபண்ட் கணக்குகளில் இருந்து பகுதி தொகை திரும்பப் பெறப்பட்டுள்ளது. சென்ற வருடம் இதே கால கட்டத்தில் 54,42, 884 பேருக்கு மட்டுமே பகுதி தொகை அளிக்கப்பட்டது.
இந்த கணக்குகள் முடிப்பால் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ரூ.73,498 கோடி பணம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் இதே கால கட்டத்தில் ரூ.55,125 கோடி மட்டுமே திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.