எடப்பாடி: சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர்  பழனிசாமி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் அவர் 7வது முறையாக போட்டியிடுகிறார்.

தமிழக முதல்வரும், அதிமுக துணைஒருங்கிணைப்பாளராகவும் உள்ள பழனிச்சாமி சேலம் மாவட்ட எடப்பாடி தொகுதியைச் சேர்ந்தவர். ஜெ.மறைவுக்கு பிறகு,  கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அவரது தலைமையிலான  அரசு, இந்த தேர்தலில், ஆட்சியை தக்க வைப்போம் என்று சூளுரைத்து,  இரட்டை தலைமையுடன் களமிறங்கி உள்ளது. அதைதொடர்ந்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், வேட்புமனுக்கள் தாக்கலும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த இரு நாட்களாக சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிச்சாமி இன்று  எடப்பாடி தொகுதியிலுள்ள தாலுகா அலுவலகத்தில்  தேர்தல் நடத்தும் அதிகாரி தனலிங்கத்திடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ‘எடப்பாடி தொகுதியில் 7- வது முறையாக போட்டியிடுவதாக தெரிவித்தவர். முதன்முறையாக  1989-ம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்கு ஜெயலலிதா வாய்ப்பு அளித்தார்.  அதைத்தொடர்ந்து, இந்த தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து அரும்பணியாற்றி இருக்கிறேன் என்றார். சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதல்வராக பல்வேறு  நன்மைகள் செய்துள்ளேன், அதிகமான ரேஷன் கடைகள், அங்கன்வாடி கட்டிடங்கள் திறந்துள்ளேன்  என்றார்.

அதைத்தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் தேர்தல் அறிக்கை, சிஏஏ சட்டம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசியவர்,  அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்துதான் தேர்தல் பணியாற்றுகிறோம் என்றும், தேர்தலில் வெற்றிபெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும்,   மாநிலத்தில் ஏராளமான அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தியுள்ளேன்.  மாநிலத்தில் உள்ள அடித்தட்டு மக்கள் அனைவரும் தேர்தல் அறிக்கையை வரவேற்றுள்ளனர்.

ஒட்டுமொத்த மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் தேர்தல் அறிக்கை அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்றவர்,  தேர்தல் அறிக்கை மக்களிடம் எடுபட்டதா என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரியும்’ என்று தெரிவித்தார்.

தமிழகம் கடலில் தத்தளிக்கிறதே என்ற கேள்விக்கு, அனைத்து மாநிலங்களும் கடன்வாங்கித்தான், வளர்ச்சி பணிகளை அமல்படுத்தி வருகின்றன,  கடனில் இருந்தாலும் வளர்ச்சிப் பணிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்றவர் வளர்ச்சி பணிகளுக்காக கடன் வாங்குவதில் தவறில்லை என்று கூறினார்.

சி.ஏ.ஏ.சட்டம்  குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, நேரடியாக பதில் தெரிவிக்காமல், மழுப்பலாக கூறிவிட்டு சென்றார்.