சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்
நாம் கடந்த 13 -ம் தேதி (மார்ச்) கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததை போலவே அமமுக மற்றும் தேமுதிக கூட்டணி கண்டுள்ளது. இக்கூட்டணியில், தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கபட்டிருக்கிறது. மேலும், கூட்டணியில் தேமுதிகவுக்கு வட தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகள் ஒதுக்கபட்டிருக்கிறது. அவர்கள் களம் காணும் 60 தொகுதிகள், அவர்கள் பெறப்போகும் மொத்த வாக்குகள், 23 தொகுதிகளில் பாமக பெரும் வாக்குகளை விட அதிகமாக இருக்கும்.
இது தேர்தலுக்கு பின்னான காலங்களில் மீண்டும் தேமுதிகவை அரசியல் நிலைநிற்க செய்யும். 2011 தேர்தலில் அதிமுகவின் வெற்றியை எப்படி தேமுதிக கூட்டணி உறுதி செய்ததோ அதேபோன்று, தேர்தலுக்கு பின்னான காலங்களில் தினகரன் மற்றும் சசிகலா அவர்களின் அரசியல் ஆளுமையை இந்த கூட்டணி உறுதிசெய்யும். அல்லது, தேர்தலுக்கு பின்னாக, ஒரு புதிய அதிமுகவிற்கான அடையாளப்படுத்துதல் தேமுதிகவில் நிகழும் என்றால் அது மிகையாகாது.
தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் மற்றும் விஜபிரபாகரனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததும் நல்ல அரசியல் முடிவே. அவர்கள், முடிந்தளவு தேமுதிக வேட்பாளர்கள் வெற்றிபெற உழைக்க வேண்டும். அவர்களுடைய வெற்றியென்பது அதிமுக கூட்டணியை பின்னுக்கு தள்ளி தேமுதிகவை இரண்டாம் இடத்திற்கு வரவழைத்தாலே, அது பெரும் வெற்றியாக கருதப்படும்.
தினகரனும், இதே வேலைத்திட்டத்துடன்தான் வேட்பாளர் தேர்வு செய்து களம் காண்கிறார். நிச்சயமாக, டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அமமுக இரண்டாம் இடத்திற்கு வர வாய்ப்புள்ளது. அமமுக மற்றும் தேமுதிக, ஒத்திசைந்து இந்த வேலைத்திட்டத்தை செயல் படுத்தும் சூழலில் எடப்பாடி தலைமையிலான அதிமுக, தேர்தலுக்கு பின்னான காலகட்டத்தில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும். மேலும், இது அமமுக மற்றும் தேமுதிக கூட்டணியை திமுகவிற்கான மாற்றாக மக்கள் மத்தியில் நிலைநிறுத்தும்.
அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் களத்தில் காட்டிய உற்சாகம், அமமுக மற்றும் தேமுதிக கூட்டணி அறிவித்தலுக்கு பின்னாக குறைந்துள்ளது. உளவியில் ரீதியாக, இந்த கூட்டணி அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கூட்டணி ஆற்றப்போகும் களப்பணியை பொறுத்து, அதிமுகவின் வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பே களப்பணியில் தொய்வதற்கும் வாய்ப்புள்ளது.
அதிமுக மற்றும் பாமக கூட்டணி, இத்தேர்தலில் இரண்டாம் நிலையில் இருந்து நழுவுவார்களேயானால், இந்த கூட்டணி நிச்சயம் தேர்தலுக்கு பின்னாக உடையும். பாமகவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இது அமையும்.
அதிமுகவிற்கோ, தேர்தலுக்கு முன்பாக இடம்மாறியவர்கள் போக, தேர்தலுக்கு பின்பாக மொத்த கூடாரமும் இடம் மாறுவதற்கான வாய்ப்பு அமையும். எடப்பாடியரும், இதை நன்கு அறிவார். அவருடைய அரசியல் நகர்வும், இதை அனுமானித்தே இருக்கும். ‘ தேர்தலில் அவர் வெல்வது அரிது என்பதை உணரும் தருவாயில், அவருடைய வியூகமும் மாறும். ஆனால், தோல்வி எப்போதும் ஒரு குற்றவாளியை அடையாளப்படுத்தும்.
சசிகலாவின் அரசியல் ஒதுங்கலும், ஓ. பன்னீர்செல்வத்தின் பின்னிருக்கை விளையாட்டும், தோல்விக்கு எடபடியாரை மட்டுமே அடையாள படுத்தும். அது அதிமுக தொண்டர்கள் மத்தியில், எடபடியார் மீது ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை பொறுத்தே எடப்பாடியரின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும்.
மாறாக, அமமுக மற்றும் தேமுதிக கூட்டணியின் வெற்றியானது அவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதனுடன், பல அரசியல் மாற்றங்களுக்கு வழி அமைக்கும். அமமுக மற்றும் தேமுதிக கூட்டணியின் வெற்றி தோல்வி, சசிகலா, தினகரன், பாமக மற்றும் எடப்பாடியின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றால் மிகையாகாது.
தேமுதிகவிற்கோ, இழப்பதற்கு ஏதுமில்லை, இனி வருவதெல்லாம் வெற்றிதான்.