டெல்லி: மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு நிகழ்ந்துள்ள காயங்கள், விபத்தினால் ஏற்பட்டதாக, எதிர்க்கட்சியினர் தாக்குதல் நடத்தினரா என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே, இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம், அவருக்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறையினர் உயர்அதிகாரியை இடைநீக்கம் செய்துள்ளது.
நந்திகிராமில், மேற்கு வங்க முதல்வரர் மம்தாவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாகக் கூறி, காவல்துறை உயர்அதிபரி, புர்பா மெடினிபூர் எஸ்.பி. பிரவீன் பிரகாஷை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்தது.
இதைத்தொடர்ந்து, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்பு போலீஸ் பார்வையாளராக பஞ்சாபின் முன்னாள் டிஜிபி புலனாய்வு அனில் குமார் சர்மா நியமக்கப்பட்டு உள்ளது. மேலும், விவேக் டியூப் தவிர, சர்மா இரண்டாவது சிறப்பு போலீஸ் பார்வையாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நந்திகிராமில் வேட்புமனுதாக்கல் செய்துவிட்டு திரும்பிய மம்தா பானர்ஜி, அங்குள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வரும்போது, சிலரால் தாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதில் மம்தாவின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் உடலின் பல இடங்களிலும் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டது. மம்தாமீதான தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல் என குற்றம் சாட்டப்பட்டது.
இது சர்ச்சையான நிலையில், அவர்மீதான தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க தலைமைச்செயலாளர், தேர்தல் ஆணையருக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, மாநில தேர்தல் ஆணையர், தலைமைச்செயலர் ஆகியோர், இது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும, சிறப்பு போலீஸ் பார்வையாளர் விவேக் டியூப் மற்றும் பொது பார்வையாளர் அஜய் நாயக் ஆகியோரிடமும் அறிக்கை கோரப்பட்டது. அவர்களும், மம்தா மீதான தாக்குதல் குறித்து, அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி நந்திகிராம் நிகழ்வுக்கு மம்தா தரப்பில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்றும், அதனால், அவரது நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளரு. மேலும், மம்தா பானர்ஜிக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதலுக்கு எந்த ஆதாரமும் இல்லை, நிகழ்வுக்கு எந்த முயற்சியும் கோரப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, காவல்துறையினரின் பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் ஆணையம், மம்தாவுக்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறை உயர் அதிகாரியை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு தோல்விக்காக எஸ்.பி. பிரவீன் பிரகாஷ் மீது வழக்குப் பதிவுசெய்யவும் உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணையம், ஒரு பாதுகாப்பு இயக்குனராக, இசட்+ பாதுகாப்பில் இருக்கும் ஒருவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய முக்கிய கடமையிலிருந்து விவேக் சஹாய் தவறிவிட்டதாக கூறி அவர் மீதும் வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய அதிகாரியை நியமித்தும் உத்தரவிட்டுள்ளது.