பாட்னா: பீகார் மாநிலத்தில் செயல்பட்டுவந்த ஒரு மாநிலக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியை, அதன் தலைவர் உபேந்திர குஷ்வாகா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சியுடன் இணைத்துள்ளார்.

இந்த குஷ்வாகா, கடந்தமுறை பதவி வகித்த பாஜக அரசில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகினார்.

ஆனால், தற்போது இந்த பரபரப்பான முடிவை மேற்கொண்டுள்ளார். அவர் கூறியதாவது, “தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தேசிய நலனுக்காகவும், மாநில நலனுக்காகவும் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியை நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி நிதிஷ் குமாரின் தலைமையை ஏற்று அவருடன் இணைந்து பயணிப்போம் என்றார்.