டெல்லி: நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகஸ்டு 1ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக, கல்வி நிறுவனங்கள் இன்னும் முழுமையாக திறக்கப்படாத நிலையில், கடந்த சில மாதங்களாக 12ம் வகுப்பு சிபிஎஸ்சி மற்றும் மாநில கல்வி பிடிக்கும் மாணவர்களுக்கு  பள்ளிகள் திறக்கப்பட்டு, கொரோனா நெறிமுறைகளுடன் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இறுதித்தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் ‘எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் உள்பட  மருத்துவப் படிப்புகளுக்கான 2021ம் ஆண்டு நீட் தேர்வு, ஆகஸ்டு மாதம்  1ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

நடப்பாண்டு முதல் பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி லைப் சைன்ஸ் படிப்புகளுக்கும், ஆயுர் வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு நடத்தப்படும்.

இந்த நுழைவுத்தேர்வு உரிய விதிமுறைகளுடனும், வழிகாட்டுதலுடனும் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளபடி நடைபெறும்.

இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும் நீட் தேர்வில் பேனா, காகிதம் முறை தொடரும்.

தேர்வு தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 11 மொழிகளில் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. முன்னதாக எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கு மட்டுமே நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடித்தக்கது.