சென்னை: தமிழகம், மகாராஷ்டிரா உள்பட 6 மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் லாக்வுடன் அறிவிக்கப்படும் வாய்ப்பு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

தமிழகம்,  புதுச்சேரி,கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தேர்தல் பிரசாரங்கள் கலைகட்டி வருகிறது. ஆங்காங்கே பொதுமக்களும் கட்சியினரும் கூடி, தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தொற்று பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு (2020)  அக்டோபர் மாதம் முதல் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. அதைத்தொடர்ந்து  தொற்று பரவல் குறைந்து வந்ததால், பொதுமுடக்கத்தில் இருந்து 90சதவிகிதம் அளவுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், பொதுமக்களும், முக்கவசம் போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிப்பதில் இருந்து மெத்தனம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போதுமீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் பல மடங்கு அதிகரித்தது. இதனால் அந்த மாநிலங்களைக் கண்காணிக்கச் சிறப்புக் குழுக்களும் அனுப்பப்பட்டன.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,584 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 85% பேர் வெறும் ஆறு மாநிலங்களில் மட்டும் சேர்ந்தவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதிலும், 60% கொரோனா பாதிப்பு மகாராஷ்டிராவில் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதேபோல கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடக, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.அ தேபோல உயிரிழப்புகளும் மகாராஷ்டிராவிலேயே அதிகமாகப் பதிவாகியுள்ளது. அங்கு 54 பேரும், பஞ்சாபில் 17 பேரும், கேரளாவில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், 19 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்குகூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் பகுதி நேர லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் கடுமையாக்கப்பட்டு உள்ளது. அதுபோல, தனிமனித இடைவெளி, பொதுநிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதுபோல தொற்று பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா தொற்று மேலும் மேலும் உயரத்தொடங்கினால், மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவும் இடம்பெற்றுள்ளது. இந்த இரு  மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.