டில்லி

கொரோனா தடுப்பூசிகள் விலை உலக அளவில் இந்தியாவில் மிகவும் மலிவு என இந்தியா டுடே ஊடகம் தவறான தகவல் அளித்துள்ளது.

இந்தியாவில் தற்போது இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்று வருகிறது.   தற்போது 60 வயதைத் தாண்டியோர் மற்றும் 45 வயதைத் தாண்டி இணை நோய் உள்ளோர் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி  போடப்படுகிறது.  இந்த மருந்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்துடனும் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா டுடே செய்தி ஊடக இயக்குநர் ராகுல் கன்வால் உலகிலேயே கொரோனா தடுப்பூசிகள் மிகவும் மலிவாக இந்தியாவில் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்த பதிவில் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளின் விலையை இந்தியாவுடன் ஒப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பாஜகவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் உலக அளவில் மிகவும் மலிவானவை என அறிவித்தது.  ஆனால் இந்தியா டுடே ஊடகம் ஒப்பிட்டுள்ள விலை மற்ற நாடுகளில் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் அரசு கொள்முதல் செய்யும் விலையை ஒப்பிட்டுள்ளது.  மக்களுக்கு அந்த விலையில் அளிக்கப்படுவதில்லை.   இந்தியாவில் மக்களுக்கு அளிக்கப்படும் விலையை இதனுடன் ஒப்பிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்துடன் போடப்பட்டாலும் இந்திய அரசு இவற்றை அதே விலையில் கொள்முதல் செய்வதில்லை என்பதைப் பற்றி இந்தியா டுடே தகவல் தெரிவிக்கவில்லை.  குறிப்பாக சீரம் இன்ஸ்டிடியூட் அரசுக்கு ரூ.212-292 விலையில் அளித்து வருகிறது.  ஆனால் வெளியாருக்கு அதை விட இருமடங்கு விலையில் விற்பனை செய்கிறது.

எனவே இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துகளின் விலை அந்த அறிவிப்பில் காண்பதை விட மிகவும் அதிகமாகும். 

அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பல நாடுகளில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.  அதே வேளையில் இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் இலவசமாகவும் மற்ற இடங்களில் கட்டணத்துடன் போடப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே இதையும் ஒப்பிடுகையில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் விலை மலிவு என்பதை எவ்வாறு இந்தியா டுடே பதிந்துள்ளது என்பது பலருக்கும் வியப்பை அளித்துள்ளது.  உண்மையான அடிப்படையில் பார்த்தால் மற்ற நாடுகளில் இலவசமாகப் போடப்படும் கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் கட்டணத்துடன் போடப்படுகிறது என்பதே சரியான தகவல் ஆகும்.