அமமுக நிறுவனர் டிடிவி தினகரன், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரின் இந்த முடிவு பலருக்கு ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளது.

ஏனெனில், முக்குலத்தோர் மிக அடர்த்தியாக வாழும் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் களம் காண்பார் என்றே பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முக்குலத்தோர் வாக்குகள் சற்று குறைவாக இருக்கும் கோவில்பட்டி தொகுதியில் அவர் களம் கண்டுள்ளார்.

இதற்கு காரணமாக சிலவற்றை கூறுகிறார்கள் அக்கட்சியினர். இந்த தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ. இவர், கடந்தமுறை வெறும் 400 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றார். கோவில்பட்டி தொகுதியில் ஏற்கனவே அமமுக சார்பில் கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது, இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமமுக சிறப்பாக வெற்றிபெற்றது. மேலும், கடம்பூர் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த பிரமுகரும் அமமுகவில் முக்கியப் பொறுப்பில் உள்ளார்.

இத்தொகுதி, உள்ளார்ந்த தென்மாவட்டங்களுக்கு மையமாக இருக்கும் ஒரு தொகுதியாகும். இதில் போட்டியிடுவதன் மூலம், அதிமுகவின் ஒரு அமைச்சரையும் வீழ்த்த முடியும். இப்படியான பல காரணங்களை அடுக்குகிறார்கள் அமமுகவினர்.

தினகரனின் தொகுதி தேர்வு சரியானது என்றே பல பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்!