டில்லி
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 மாடலை இந்தியாவில் விரைவில் உற்பத்தி செய்ய உள்ளதால் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 வரிசையில் ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரொ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஐபோன் மாடல்கள் அனைத்துக்கும் சர்வதேச அளவில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இவை அனைத்தும் 5 ஜி வசதி உடையவை ஆகும்.
தற்போது இந்த ஐபோன் 12 மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் தமிழகத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ, ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் எஸ்இ 2020 மற்றும் ஐபோன் 11 ஆகியவை உற்பத்தி ஆகின்றன. எனவே இது ஐபோன் வரிசையில் ஐந்தாம் போனாக இருக்கும்.
முந்தைய ஐபோன் மாடல்களைப் போல் இந்த மாடல்களும் தமிழகத்தில் உற்பத்தி ஆக வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன் மூலம் சீனாவில் உள்ள ஐபோன் உற்பத்தியில் இருந்து இந்தியாவுக்கு 7-10% வரை இந்தியாவுக்கு மாற்றப்பட உள்ளது. ஆனால் இந்தியாவில் எந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளி வரவில்லை,.
இந்தியாவில் தற்போது 64 ஜிபி ஐபோன் 12 மாடல் ரூ.79,900க்கும் 128 ஜிபி மாடல் ரூ.84,900 மற்றும் 256 ஜிபி மாடல் ரூ.94,900 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவை இந்தியாவில் ஆப்பிளின் ஆன்லைன் வர்த்தகம், மற்றும் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்கள் மூலம் விற்கப்படுகிறது. மேக் இன் இந்தியா என்னும் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என்பதால் இதன் விலை மலிய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.