சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால், நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்களின் அறை, சட்ட அறைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். – இன்று, வழக்கறிஞர்கட்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக ஓராண்டு காலமாக மூடப்பட்டிருந்த சட்ட அறைகள் சமீபத்தில்தான் திறக்கப்பட்டன. இதையடுத்து, அங்கு கூட்டம் சேர்வதால் சில வழக்கறிஞர்களுக்கு கொரோனா தொற்று பரவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சட்ட அறைகளை மூடவும், தனியார் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் வர தடை விதித்தும், ஆன்லைன் மூலம் வாதாடவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து 8ந்தேதி முதல் போராட்டத்தில் குதித்துள்ள வழக்கறிஞர்கள், கொரோனா பாதிப்பால் கடந்த ஓராண்டாக சட்ட அறைகள் மூடப்பட்டுள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதாரத்துறையின் பொய்யான தகவலால் சட்ட அறைகள் திறக்கப்படாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.