அகமதாபாத்: குஜராத் மாநில கிர் காட்டில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், மொத்தமாக 313 சிங்கங்கள் மரணமடைந்துள்ளதாக அம்மாநில அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே ஆசிய சிங்கங்கள் வாழ்கின்றன. ஆனால், அந்த சிங்க இனம் தற்போது அபாய கட்டத்தில் இருப்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.
குஜராத் மாநில அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது; கிர் காடுகளில் கடந்த 2 ஆண்டுகளில் மரணமடைந்த 313 சிங்கங்களில், 152 சிங்கக் குட்டிகள், 90 பெண் சிங்கங்கள் மற்றும் 71 ஆண் சிங்கங்கள். கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து, 2020 டிசம்பர் மாதம் வரை இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
இறந்துபோன 71 ஆண் சிங்கங்களில், 69 சிங்கங்களும், இறந்துபோன 152 குட்டிகளில், 144 குட்டிகளும் இயற்கை காரணங்களால் மரணமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அருகிலுள்ள கிராமங்களிலிருந்து அழுகிப்போன கால்நடை இறைச்சிகள் காட்டுக்குள் கொண்டு செல்லப்படுவதுதான் இந்த இறப்புகளுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த அழுகிய இறைச்சியை உண்பதால்தான் சிங்கங்கள் மரணமடைகின்றன என்கின்றனர் அவர்கள்.
எனவே, சிங்கங்கள் வாழும் பகுதியை, சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து, பாதுகாக்கப்பட்ட பகுதியாக பராமரிக்க வேண்டுமென்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது.