சண்டிகர்: அரியானா மாநில பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சம்யுக்தா  கிஷான் மோர்ச்சா (Samyukta Kisan Morcha) என்ற கட்சி , பாஜக முதல்வரான மனோகர் லால் கட்டார் அரசுக்கு எதிராக சட்டப்பேரவைச் செயலரிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதையடுத்து வரும் 10ந்தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதித்து வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரியானாவில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டம் 10 நாட்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில், மாநில பாஜக அரசு, மோடி அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. மேலும, காங்கிரஸ் கட்சி உள்பட மாநில கட்சிகளும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில்,  போராட்டக்காரர்களுக்கு எதிராகவும்,  பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் போராட்டக்காரர்களை இழப்பீடு வழங்க செய்யும் சட்டம் கொண்டு வர அரியானா அரசு திட்டமிட்டுள்ளது. இது பரபரப்பையும் கடும் எதிர்ப்பையும் உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த   மாநில காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் ஹூடா,  அரியானா அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். இந்த அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. அதேபோல் எம்எல்ஏ-க்களின் நம்பிக்கையையும் இழந்து விட்டது என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில்,  கட்டார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசுக்கு இதுவரை வழங்கி வந்த ஆதரவை இரண்டு சுயேட்சை எம்எல்ஏ-க்கள்  விலக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கட்டார் தலைமையிலான அரசுக்கு சம்யுக்தா  கிஷான் மோர்ச்சா (Samyukta Kisan Morcha) என்ற கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நோட்டீஸ் வழங்கி உள்ளது. பாஜக-ஜேஜேபிக்கு எதிராக வாக்களிக்க குடிமக்கள் தங்கள் எம்எல்ஏக்களை அணுக வேண்டும். இந்த முக்கியமான கட்டத்தில் விவசாயிகளுடன் நிற்காதவர்களுக்கு வாக்காளர்களால் ஒரு பாடம் கற்பிக்கப்படும் என்பதை ஹரியானா எம்.எல்.ஏக்கள் அறிந்து கொள்ளட்டும் என தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வரும் 10ந்தேதி சட்டமன்றத்தில் கட்டார் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.