சென்னை: சசிகலாவின் துரோகிகள் எங்கள் குடும்பத்தில்தான் உள்ளார்கள், வெளியே இல்லை என்று சசிகலாவின் சகோதரர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.
சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவின் வருகை, அவரது அரசியல் அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்திய சலசலப்பைப்போல, அவரது அரசியல் துறவறமும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த ஜெயலலிதாவுடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராகவும், தோழியாகவும் இருந்து, அதிமுகவிலும் தலையிட்டு, அரசியல் செய்ததுடன், தேர்தல் காலக்கட்டத்தில், கூட்டணி வியூகத்தில் முக்கிய பங்காற்றியவர் சசிகலா. ஜெ.வி.ன போயஸ் கார்டன் வீட்டிலேயே கோலோச்சி வந்த சசிகலா மீது, ஏராளமான புகார்கள் உள்ள நிலையிலும், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக , ஜெயலலிதாவின் நிழல்போல சசிகலா இருந்து வந்ததை மறுக்க முடியாது. ஜெயலலிதா மீதான ஊழல் புகார்கள் மற்றும், அவரது மறைவுக்குக்கூட சசிகலாதான் காரணம் என இன்றளவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதனால்தால் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு, 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து மீண்டும் களத்திற்கு வந்தார்.
ஆனால், தற்போது, அவர் திடீரென தமிழக அரசியல் களத்தை விட்டு விலகுவதாக அறிவித்து உள்ளது, தமிழக அரசியலில் அதிர்ச்சியையும் பல்வேறு யூகங்களையும் கிளப்பியுள்ளது. சசிகலாவின் முடிவுக்கு ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவிக்கும் வேளையில், இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணமாக கூறவேண்டுமானால், பாஜக தலைவர்கள் வாலண்டியராக வந்து பேட்டி கொடுப்பதிலேயே தெரியவருகிறது. பாஜக தலைவர்களின் கருத்துக்கள் , எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை வெளிப்போட்டு காட்டியுள்ளது.
இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழகப் பொதுச் செயலாளருமான திவாகரன், சசிகலாவின் அறிவிப்பை முழுமனதோடு வரவேற்கிறேன், சசிகலா விருப்பப்படி அதிமுக வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். இதுவே எனது விருப்பமும் என்று கூறியுள்ளார்.
மேலும், சசிகலா ஒரு வீராங்கனை என புகழ்ந்தவர், சரியான நேரத்தில் போர்க்களத்திலிருந்து பின்வாங்கியதைப் போல், சசிகலா அரசியலில் இருந்து பின்வாங்கி உள்ளார். இதற்கு காரணம், துரோகிகள் அவரது முதுகில் குத்த வந்ததை தெரிந்துகொண்டே தற்போது ஒதுங்கி உள்ளார்.
சசிகலாவுக்கு துரோகிகள் வெளியில் இல்லை. எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள் என்று கூறியவர், தொடர்ந்து, டிடிவி தினகரனை குறிப்பிட்டே குற்றம்சாட்டினார். டிடிவி தினகரன் உள்பட சிலரால்தான், சசிகலா தற்போது அரசியல் விலகல் முடிவை எடுத்துள்ளார். தற்போதைய நிலையில் சசிகலா அரசியலுக்கு வருவதை விட அவருடைய உடல் நலனே முக்கியம், அதுவே எங்களது விருப்பமும் என்றவர்,
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து முயற்சிகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, டிடிவி தினகரன், அதிமுகவை அமமுகவுடன் இணைப்பது குறித்து பேசியது கோபத்தை ஏற்படுத்தியதாகவும், அதுமட்டுமின்றி, டிடிலி தினகரன் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டதும், சிறுபிள்ளைத் தனமானது என சாடியவர், இதுபோன்ற நடவடிக்கைகளால்தான், சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.