சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி,  அதிமுகவில் விருப்பமனு வழங்கும் நாள் இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் பெயரில், நூற்றுக்கணக்கானோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருப்பதால், அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம் என பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. இதையடுத்து, தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன அரசியல் கட்சிகள். திமுக சார்பில் வேட்பாளர் நேர்காணலே நடைபெற்று வருகிறது. அதிமுகவிலும் நாளைமுதல் வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், அதிமுகவில் விருப்பமனு வழங்க இன்று கடைசி நாள் என்பதால், அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது. ஏராளமான அதிமுகவினர் விருப்பமனுக்களை தாக்கல் செய்தனர். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின்  சொந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களும், அவரது தீவிர ஆதரவாளர்களும்,  ஓபிஎஸ்சின் இளைய மகன் ஜெயபிரதீப் பெயரில்,  கம்பம், வில்லிவாக்கம், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 100க்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகம் வந்தபோது,  ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் சசிகலா குனமடைய வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டு, சசிகலா வருகைக்கு ஆதரவு தெரிவித்தார். இவரது பதிவு  அதிமுகவில்  பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது, அதிமுக சார்பில் தேர்தலில் களமிறங்கும் வகையில், தேர்தலில்போட்டியிட ஆதரவாளர்கள் மூலம்  விருப்ப மனு அளித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே  ஓ.பன்னீர் செல்வத்தில் மூத்தமகன் ரவீந்திரநாத் தேனி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.