கன்னியாகுமரி:
காமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்தது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி வந்த அவர், அங்கு வக்கீல்கள், உப்பள தொழிலாளிகளுடன் கலந்துரையாடினார். நேற்று நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார்.

நெல்லை பிரசாரம் முடிந்த பின்பு தென்காசி மாவட்டம் சென்ற அவர் நேற்றிரவு குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

இன்று காலை 9.20 மணிக்கு இலஞ்சியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி கடற்கரை அருகே உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடில் வந்திறங்கிய ராகுல் காந்திக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல் காந்தி, கார் மூலம் கன்னியாகுமரி சர்ச் ரோடு பகுதிக்கு வந்தார். அங்கு அவரை காண ஏராளமான மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் கூடி நின்றனர். அவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார்.

பின்னர் அவர் கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாக இருந்து மறைந்த வசந்தகுமார் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு அவரது குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, வசந்த குமாரின் மகனும், மாநில காங்கிரஸ் பொது செயலாளருமான விஜய் வசந்திற்கும் ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், காமராஜர் முதல்வராக இருந்தபோது, அவர் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்தார். நான் கவனித்ததில் காமராஜர்தான் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய முதல் இந்திய குடிமகன். அந்த நேரத்தில் இந்திய பொருளாதார மேதைகள் இலவச மதிய உணவு கொடுத்தால், பொருளாதார சீரழிவை ஏற்படுத்தும் என்றனர். ஆனால் காமராஜர் பொருளாதார நிபுணர்கள் சொன்னதை கேட்காமல், மக்கள் சொன்னபடி மதிய உணவு வழங்கினார். . காமராஜர் முயற்சியால் தமிழகம் மாட்டுமல்லாது இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த பெருமை காமராஜரை சாரும். அதுதான் தமிழகம் நாட்டின் வழிகாட்டி என கூறினேன் என்றார்.

அப்போது, காமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்தது என்றும், காமராஜர் இறக்கும்போது அவரிடம் ஒரு சூட்கேஸ் அளவுதான் உடமைகள் இருந்தன. என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.