பெர்லின்

மிழக அரசு நிதி வழங்காததால் ஜெர்மனியில் உள்ள கோலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவு மார்ச் 31 முதல் மூடப்பட உள்ளது.

உலகில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் பல ஆண்டுகளாகத் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது.  அவ்வகையில் ஜெர்மனியில் உள்ள கோலோன் பல்கலைக்கழகத்தில் தமிழியல் ஆய்வுப் பிரிவு கடந்த 1963 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. இந்த பிரிவை தமிழால் ஈர்க்கப்பட்டு அதைக் கற்றறிந்த ஜெர்மானியர் கிளவுஸ்லுட்விட் ஜெரனல் என்பவர் நிறுவி உள்ளார்.

தற்போது முனைவர் படிப்புக்கான 5 படிப்புக்கள் உள்ளிட்டவற்றில் பல மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  2014-ல் பல்கலைக்கழக நிர்வாக முடிவின்படி, தமிழ் பிரிவின் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ், செப்டம்பர் 2020-ல் ஓய்வு பெற்றபின் தமிழ்ப் பிரிவு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதை அமெரிக்காவின் தமிழ் இருக்கைகளில் பணியாற்றிய தமிழ்ப் பேராசிரியர்கள் தடுக்க முயன்றனர்.  எனவே அமெரிக்க வாழ் இந்தியர்களான அவர்கள் 2018-ல் திரட்டி பல்கலைக்கழகத்துக்கு அளித்த நிதியால், மூடும் முடிவு ஜூன் 2022 வரை தள்ளி வைக்கப்பட்டது. பேராசிரியர் உல்ரிக்கின் ஓய்வுக்கு பிறகும் பாதி வேலைநேரத்துடன் தற்காலிகமாக அவரது பணியை நீட்டிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அவருடன் உதவிப் பேராசிரியர் ஸ்வென் வெட்டர் மான் எனும் ஜெர்மானியர் நிரந்தரப் பணியில் தொடர்ந்தார்.

இந்த நிதியின் மற்றொரு பாதித் தொகையான ரூ.1 கோடியே 24 லட்சத்தைத் தமிழக அரசு அளிப்பதாக 2019-ல் கூறியது.  கொரோனா பரவலால் உருவான நிதிப் பற்றாக்குறையால் அந்த தொகை அளிக்க முடியாமல் தள்ளிப் போவதாகக் கூறப்படுகிறது.  ஆகவே, வரும் மார்ச் 31-ம் தேதியுடன் உதவிப் பேராசிரியர் வெட்டர் மானை பணிநீக்கம் செய்து தமிழ்ப் பிரிவை மூட கொலோன் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவை காக்க தேவைப்படும் 1,37,500 ஈரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே 24 லட்சம்) ஐரோப்பியத் தமிழர்கள் கூட்டமைப்பு சார்பில் திரட்டப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.