சென்னை: தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஸ்டிரைக் 3வது நாளாக தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், ஓய்வூதிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 25-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.
அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று 3-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் வழக்கத்தை விட குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பல மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நல ஆணையம் அழைத்துள்ளது.
தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மாலை 3 மணிக்கு போக்குவரத்து தொழிலாளர்களுடன் தொழிலாளர் நல ஆணையம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதில் முடிவு எட்டப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.