நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென உயர்ந்துகொண்டே வருகிறது. தமிழகத்திலும் கடந்த ஒரு வாரமாக தொற்று பாதிப்பு உயரத்தொடங்கி உள்ளது. அதுபோல ஜம்மூ காஷ்மீரிலும் கொரோனா பாதிப்பு சில தினங்களாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாவோர், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து முழுமையாக வெளியே வர கண்காணிப்பு, கட்டுப்பாடு, அவசியம். அதன்படி கடந்த மாதம் 27-ந் தேதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் தொடர்ந்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.