நியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை பெற்றுவிட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 5 அமெரிக்கர்களில் ஒருவர், தடுப்பு மருந்தின் முதல் டோஸை பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில், கொரோனா தடுப்பு மருந்தை, அனைத்து மக்களும் முன்வந்து பெறும் வகையில், அந்நாட்டு நிறுவனங்களுக்கு பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது அமெரிக்க அரசு.

அதாவது, தடுப்பு மருந்து ஊக்கத்தொகைகளை நிறுவனங்கள், தமது ஊழியர்களுக்கு வழங்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது. நிறுவன வளாகங்களில், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்போருக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஜூலை மாத முடிவிற்குள், பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்திவிடும் வகையில், அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.