5 மாநில தேர்தல் தேதிகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவிப்பு வெளியிட்டார்.

தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை குறித்து பேசிய அவர், கொரோனா காலத்தில் தேர்தலை நடத்த தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடக்கையும் எடுக்கப் பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து தேர்தல் நடைபெறக்கூடிய மாநிலங்களின் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்படும்

மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியிருக்க கூடிய வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக செயல்படுத்த படுவது உறுதி செய்யப்படும்.

வாக்காளர்களின் பாதுகாப்பு கருதி வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளதுடன், வாக்கு சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் முன்கள பணியாளர்களாக வகைப்படுத்தப் படுவார்கள், தேர்தல் பிரச்சார அனுமதி தொடர்பான பணிகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே நடக்கும்.

வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது இரண்டு பேர் மட்டுமே உடன் வரவேண்டும் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு வர அதிகபட்சமாக இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதி

வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளும் போது 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும்.

வாக்குப்பதிவு மையங்களில் இருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்,

மக்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து மேற்கண்ட தேர்தல் கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும்.

தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10,17, 22, 26 மற்றும் ஏப்ரல் 29 என எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தின் 91 தொகுதிகள் உள்ளிட்ட மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஏப்ரல் 6 ம் தேதியே தேர்தல் முடிவடைந்தாலும், மேற்கு வங்கத்தின் மீதமுள்ள 203 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்த பின் மே 2 ம் தேதி அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழக தேர்தல் பார்வையாளர்களாக அலோக் வர்தன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல், தமிழகத்தின் காவல் பார்வையளராக தேவேந்திர குமார் ஐபிஎஸ் நியமனம்.

இது தவிர தமிழகத்திற்கு தேர்தல் செலவின பார்வையாளர்களாக இரண்டு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தமிழகத்தில் வேட்பாளர் ஒருவருக்கு அதிகபட்ச செலவு தொகையாக 30.80 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது இருந்த வாக்குசாவடிகளை விட இது 34.73 சதவீதம் அதிகம் ஆகும்.

சமூக வலைதளங்களில் பிரச்சாரங்களுக்கென சிறப்பு விதிகள் உருவாக்கப்படுகின்றன. மத்திய அரசின் சமூக வலைதள கொள்கையை பின்பற்றி இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில்

வேட்புமனு தாக்கல் –  12.03.21 தொடங்குகிறது

19.03.21 வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.

வேட்புமனு  பரிசீலனை 20.03.21 அன்று நடைபெறுகிறது

22.03. 21 வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்  

தேர்தல் நாள் : 06.04.21

வாக்கு எண்ணிக்கை : 02.05.21

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஊடகங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன் தமிழக அரசு வெளியிட்ட கடைசி அறிவிப்புகள், அரசாணைகள், பதிவுகள் குறித்த அறிக்கையை அனுப்பி வைக்க உத்தரவிட்டிருக்கிறது.

சாதி, மத, மொழி, இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பரப்புரை செய்யக்கூடாது. வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக் கூடாது.

மாற்று கட்சியின் கொள்கை, செயல் திட்டங்கள், ஆட்சியை விமர்சிக்கலாம். மாற்று கட்சியின் தனி நபர்களின் சொந்த வாழ்க்கையை விமர்சிக்க கூடாது.

வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை. வேட்பாளர் அல்லது வாக்காளராக இருந்தால் வாக்குச்சாவடிக்கு அமைச்சர்கள் செல்லலாம் என்று அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்குமான தேர்தல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகள் மீறல் மற்றும் பணப்பட்டுவாடா குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சி-விஜில் c vigil என்ற செயலி மூலமாக பொதுமக்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கோரிக்கை வைத்துள்ளார்.