சென்னை: அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் கட்சி தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகளில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன.
இந் நிலையில் தமிழகத்தில் அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. அதற்கான தொகுதிகளின் பட்டியலை அக்கட்சியின் தமிழக தலைவர் வகீல் அமகது, கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசியிடம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: நாங்கள் கொடுத்த பட்டியலில் மொத்தம் 22 இடங்கள் உள்ளன. 20 இடங்கள் தமிழகத்திலும், 2 இடங்கள் புதுச்சேரியிலும் உள்ளன.
அவை அனைத்திலும் பல பகுதிகள் எங்களின் கோட்டைகளாக உள்ளன, குறைந்த பட்சம் 8 இடங்களை வெல்லும் நம்பிக்கையுடன் உள்ளோம். வாணியம்பாடி, ஆம்பூர், கிருஷ்ணகிரி, சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை போன்ற தொகுதிகள் பட்டியலில் உள்ளன. வேறு எந்த கூடுதல் விவரங்களையும் இப்போதைக்கு வெளியிட முடியாது.
90% நாங்கள் ஒரு கூட்டணியில் சேர்ந்து தான் போட்டியிட போகிறோம் என்பது இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்த கூட்டணியுடன் என்பதை இந்த நேரத்தில் வெளிப்படுத்த முடியாது. கூட்டணி இல்லை என்றால், தனித்து போட்டியிட உள்ளோம் என்றார்.