புதுடெல்லி: சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில், டெல்லி – ஜெய்ப்பூர் வழித்தடத்தில், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பேருந்தை அறிமுகம் செய்ய தேசிய தெர்மல் பவர் கார்பரேஷன் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவொரு அரசு நிறுவனமாகும். அதேசமயம், நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் இந்தப் போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வகைப் பேருந்து, எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து எந்த தகவலும், அரசு தரப்பிலிருந்து வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், இந்த ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து சேவை நடைமுறைக்கு வந்தால், நாட்டிலேயே, நகரங்களுக்கிடையில் நடைபெறும் இந்தவகையிலான முதல் பேருந்து சேவையாக இது இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இதற்கு முன்னர், மும்பையில் இத்தகைய பேருந்து சேவை பரிசோதனை நடத்தப்பட்டதும் நினைவில் கொள்ளத்தக்கது.