டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேலும் 3 கொரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய் தடுப்பு பணிகளின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முன் கள பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
2 ஊசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேலும் 3 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி ஆய்வகம், சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா உள்ளிட்ட 3 நிறுவனங்கள் தடுப்பூசிகளின் ஒப்புதலுக்கான தரவுகளை சமர்ப்பித்து உள்ளன.
முழுக்க, முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் என்பதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்ற நம்பிக்கையை எழுப்பி உள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள கோவிஷீல்டு மருந்தை தவிர சீரம் இன்ஸ்டியூட் மற்றொரு தடுப்பூசியை தயாரித்து வருகிறது.
புனேவை மையமாக கொண்ட நிறுவனம் இந்தியாவில் அமெரிக்க மருந்து தயாரிப்பாளரான நோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. 2021ம் ஆண்டின் பிற்பாதியில் இந்த தடுப்பூசி சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.