அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கெதிரான 3வது டெஸ்ட்(பகலிரவு) போட்டியில், ரிக்கிப் பாண்டிங் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோரின் சாதனைகளை விராத் கோலி முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கேப்டனாக இருந்து சர்வதேசப் போட்டிகளில் அதிகமான சதங்களை அடித்தவர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு இணையாக உள்ளார் கோலி. இருவரும் தற்போது 41 சர்வதேச சதங்களுடன் உள்ளனர். கோலி டெஸ்ட் போட்டியில் மட்டும் 28 சதங்களை அடித்துள்ளார்.
நாளை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் கோலி சதம் அடித்தால், ரிக்கி பாண்டிங்கின் 41 சர்வதேச சதங்களை கோலி முறியடித்து 42வது சதம் அடித்த பெருமையைப் பெறுவார்.
தோனியின் சாதனை
அதுமட்டுமல்லாமல், உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்றவர்கள் வரிசையில் தோனியின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். உள்நாட்டில் 21 டெஸ்ட் வெற்றிகளைப் பெற்று கோலியும், தோனியும் சமநிலையில் உள்ளனர்.
அகமதாபாத்தில் மொட்டீரா மைதானத்தில் நாளை தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை, இந்திய அணி வீழ்த்தினால், உள்நாட்டில் 22 வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற பெருமையைப் பெறுவார் விராத் கோலி.