இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்குவது குறித்து வருகிற மார்ச் மாத இறுதிக்குள் பிசிசிஐ அமைப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், டி-20 உலகக் கோப்பைப் போட்டியை இந்தியாவிலிருந்து வேறு நாட்டுக்கு மாற்றுமாறு ஐசிசி அமைப்பிடம் வலியுறுத்துவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஷான் மானி தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா – பாகிஸ்தான் என்ற இரு அணிகளும் சுற்றுப்பயணம் செய்து விளையாடாமல் பொதுவான இடத்தில் மட்டுமே கிரி்க்கெட் விளையாடி வருகின்றன. இந்த முறை டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதால், பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியா விசா வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இஷான் மானி பேசியுள்ளதாவது, “பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்குவோம் என்று பிசிசிஐ அமைப்பு, வரும் மார்ச் மாத இறுதிக்குள் உறுதி அளிக்காவிட்டால், டி-20 உலகக் கோப்பையை இந்தியாவிலிருந்து வேறுநாட்டுக்கு மாற்றுங்கள் அல்லது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றுங்கள் என்று ஐசிசி அமைப்பிடம் முறையிடுவோம்.
இந்தப் போட்டியைக் காண பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமல்லாமல், பத்திரிகையாளர்கள், முக்கிய விஐபிக்கள், ரசிகர்கள் என பலர் இந்தியா செல்வார்கள். ஆதலால் விசா வழங்க வேண்டும்.
ஆனால், பிசிசிஐ அமைப்பு தன்னிடம் உள்ள பணத்தைப் பயன்படுத்தி மற்ற நாடுகளின் கிரிக்கெட் அமைப்பை விலைக்கு வாங்கிவிடுகிறது. ஆனால், நாங்கள் இந்தியாவைத் தவிர்த்துவிட்டு கிரிக்கெட்டை நடத்த முயல்கிறோம்.
தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைக் காரணம் காட்டி, ஆஸ்திரேலியா தனது பயணத்தை ரத்து செய்தது வேதனையாக இருக்கிறது. கடந்த 2020ம் ஆண்டில் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்தபோது, பாகிஸ்தான் அணி அங்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடினர்.
அந்த நேரத்தில், பாகிஸ்தான் இங்கிலாந்து செல்ல மறுத்திருந்தால் அவர்களுக்கு 35 லட்சம் பவுண்ட்கள் இழப்பு ஏற்பட்டிருக்கும். அதேபோல ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல இந்தியா மறுத்திருந்தால், பெரும் இழப்பை அந்நாடு சந்தித்திருக்கும்” என்றுள்ளார் அவர்.