சென்னை: நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பரபரப்பு ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ வெங்கடேசன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.
புதுச்சேரியில் நாராயணசாமிக்கு எதிராக அவரது கட்சியான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து நெருக்கடி கொடுத்த நிலையில், கூட்டணி கட்சியான திமுக வின் சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரான வெங்கடேசனும் திடீரென தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. நாராயணசாமி அரசு கவிழ்வது உறுதியானது. அதன்படியே புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன், எம்எல்ஏ பதவியை மட்டும்தான் ராஜினாமா செய்தேன். திமுகவை விட்டு விலகவில்லை என்று கூறினார். மேலும், ராஜினாமா செய்யும் முன் திமுக கட்சியின் மேலிடத்திடம் தகவல் சொல்லிவிட்டேன் என்றும் தெரிவித்திருந்தார். இதனால் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.