டில்லி

தஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக வந்த செய்தி தவறானது என தெரிய வந்துள்ளது.

கொரோனா தொற்று உலகை அச்சுறுத்தி வருகிறது.  இதையொட்டி கடந்த ஜூன் மாதம் யோகா ஆசிரியர் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனில் என்னும் ஒரு தடுப்பு மருந்தை அறிமுகம் செய்தது.   அப்போது இந்த மருந்தின் அறிவியல் ஆதாரங்கள் குறித்து சந்தேகங்கள் எழுந்தன.  மத்திய ஆயுஷ் அமைச்சகம் கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று மட்டும் தெரிவித்தது.

அதன் பிறகு அந்த மருந்து குறித்து எவ்வித தகவலும் இல்லை.  நேற்று டில்லியில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் அந்த மருந்தை அறிமுகம் செய்தது.   இந்த விழாவில் பதஞ்சலி நிறுவன அதிபர் பாபா ராம் தேவ், மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், நிதின் கட்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   இந்த இயற்கை மருந்து குறித்து பாபா ராம்தேவ் உரையாற்றினார்.

பாபா ராம்தேவ் இந்த கொரோனில் மருந்து கொரோனா தொற்று உள்ளவர்களை 3 7 முதல் நாட்களில் 100% குணப்படுத்தும் எனவும் இதற்கு உலக சுகாதார மையம் மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.  ஆனால் இந்த தகவல்கள் தவறானது என தற்போது தெரிய வந்துள்ளது.  அதாவது இந்த கொரோனில் மாத்திரையை உலக சுகாதார மையம் ஒப்புதல்  அளிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார மைய அமைப்பின் மத்திய மருந்துக் கட்டுப்பாடு பிரிவு, ”எங்களுக்கு ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து இது மருந்துப் பொருள் என உறுதி அளிக்கப்படும் சி பி பி மட்டும் கிடைத்துள்ளது. அந்த சிபிபியில் கொரோனாவின் வழம்மகான மருந்துகளுடன் கூடுதலாக இதையும் நோயாளிகளுக்கு அளிக்கலாம் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

எனவே இந்த கொரோனில் ,மருந்து தனியாக அளிப்பதால் கொரோனா குணமடையும் என்பதற்கு எவ்வித ஒப்புதலோ அல்லது சான்றிதழோ உலக சுகாதார மையம் அளிக்கவில்லை என்பது தெளிவாகி உள்ளது.   மேலும் ஆயுஷ் அமைச்சகமும் இதை கொரோனா மருந்துகளுடன் கூட்டு மருந்தாக அளிக்க மட்டுமே பரிந்துரை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.