புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களில் மேலும் 3 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாக, மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் -திமுக கூட்டணி 19 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அரசுக்கு எதிராக பேசிய நிலையில் பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததால், காங்கிரஸ் கூட்டணி பலம் 18 ஆக குறைந்தது. அதைத்தொடர்ந்து, மாநில அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களில் சிலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
4 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால், நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்தது. இதையடுத்து, மாநில பொறுப்பு ஆளுநர் தமிழிசை, வருகின்ற 22-ஆம் தேதி மாலைக்குள் அரசு ரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து நாளை புதுச்சேரி சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூடுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், நாராயணசாமிக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியில் உள்ள மேலும் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளனர். இதனால், நாராயணசாமி அரசு கவிழ்வது உறுதியாகி உள்ளது. புதுச்சேரியில், காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லாத காரணத்தால் அக்கட்சியை விட்டு பலர் விலகி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
நாராயணசாமி அரசு நாளை பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் மேலும் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.